Tuesday, April 13, 2010

முற்றத்து மல்லிகை


-வதிரி.சி.ரவீந்திரன்

முத்துச் சிதறல்களாய்
முதிராத பனி அமுதாய்
முற்றத்து மல்லிகையே
மோகனமாய்க் கூத்திட்டு
சித்தம் கவர்ந்தெந்தன்
சிலுசிலுத்த உணர்வுகளில்
சித்திரைப் பூங்காற்றாய்ச்
சிரித்த சிறுமலரே!


வண்டு பறந்துவந்துன்
வாயமுதத் தேனுண்டு
வாச நறுமிதழில்
வட்டமிட்டு வட்டமிட்டே
நின்று நினைவிழந்து
நெஞ்சமதில் மயக்கமுற்று
நித்திரையாய்ப் போனதையும்
நானறிவேன் நானறிவேன்!


பனிஉறைந்த உன் இதழ்கள்
பால்வெண் நுரைச்சிதறல்!
பன்னீரின் வாசனையில்
பருவஎழிற் கன்னியவள்
தனியழகுத் திருமணத்தில்
தாலியுடன் மாலையெனத்
தானிருக்கா தேன்நீயோ
வீதியிலே வீழ்ந்திட்டாயே?

நன்றி-தினபதி (17/06/1978)

Friday, March 26, 2010

உபதேசம்


...வதிரி.சி.ரவீந்திரன்

சாதியால் குறைந்தவனை
காதலித்த மகளுக்கு
காதலை மறக்க
பைபிளில்சத்தியம் கேட்கிறார் தந்தை.
பைபிளின் உள்ளடக்கம்
"எல்லோரையும் ஒன்றாய் நேசி".

சில்லறைகள்


...வதிரி.சி.ரவீந்திரன்

நாங்கள் சில்லறைகள்
அவருக்கு;
எங்கள் தொழிற்சாலையில்
மகான் நினைவுக்கு
உண்டியல் குலுக்குகிறார்
விழுகின்ற சில்லறைகள்
நாங்கள்தான்!

அறிவு


.....வதிரி.சி.ரவீந்திரன்

எங்கள் ஊரின்
வீடுகள் எங்கும்
மின்விளக்குகள்
ஒளிர்கின்றன....
ஆனால்-எங்கள்
ஊர் இன்னும்
இருளில்தான்!!!!!

Monday, March 22, 2010


பேதம்

---வதிரி சி. ரவீந்திரன்

குடிசைக்குள்ளே
குழந்தைகள் கூடிப்
பசியால் அழுதன.
மாடியின் முன்னே
அரிசிமூடைகள் 'லொறி'யால் இறங்கின.

புகழ்






---வதிரி சி. ரவீந்திரன்

எட்டுச் சிகரம் கட்டி
என்றும் எடுப்பான திருவிழாக்கள்.
ஆண்டவன் சந்நிதியோ
அழியும் நிலையில் ...

பிரிவு



---வதிரி சி. ரவீந்திரன்

எனது ஊரில்
இரண்டு சமாதான நீதவான்கள்
இப்போ
எனது ஊர் இரண்டு