Tuesday, April 13, 2010

முற்றத்து மல்லிகை


-வதிரி.சி.ரவீந்திரன்

முத்துச் சிதறல்களாய்
முதிராத பனி அமுதாய்
முற்றத்து மல்லிகையே
மோகனமாய்க் கூத்திட்டு
சித்தம் கவர்ந்தெந்தன்
சிலுசிலுத்த உணர்வுகளில்
சித்திரைப் பூங்காற்றாய்ச்
சிரித்த சிறுமலரே!


வண்டு பறந்துவந்துன்
வாயமுதத் தேனுண்டு
வாச நறுமிதழில்
வட்டமிட்டு வட்டமிட்டே
நின்று நினைவிழந்து
நெஞ்சமதில் மயக்கமுற்று
நித்திரையாய்ப் போனதையும்
நானறிவேன் நானறிவேன்!


பனிஉறைந்த உன் இதழ்கள்
பால்வெண் நுரைச்சிதறல்!
பன்னீரின் வாசனையில்
பருவஎழிற் கன்னியவள்
தனியழகுத் திருமணத்தில்
தாலியுடன் மாலையெனத்
தானிருக்கா தேன்நீயோ
வீதியிலே வீழ்ந்திட்டாயே?

நன்றி-தினபதி (17/06/1978)